கடந்த காலப் பதிவுகள்
எமது கல்லூரி ஆராதனை மண்டபம் (அகற்றப்பட முன்னர்- 2010)
நூற்றாண்டு விழா காணப்போகும் எமது கல்லூரியின் வரலாற்றில் 29-04-2010 பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய முக்கிய தினமாகிறது. எமது ஆராதனை மண்டபம் நீண்ட காலப் போரினாலும் மிகப் பழைய கட்டடமானதாலும் மிகவும் பாதிப்புக்குள்ளானது. இதைப் புனரமைக்க முடியாததால் புதிய ஆராதனை மண்டபம் ஒன்று கட்டப்பட வேண்டும் என்ற எண்ணமும் தேவையும் ஏற்பட்டது. வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் வாழும் பாடசாலை நலன்விரும்பிகள் பலரும் இது சம்பந்தமாக ஆழமாகச் சிந்திக்கத் தலைப்பட்டனர். 6, 7 வருடங்களாகக் கல்லூரி அதிபரும், பழையமாணவர் சங்க, அபிவிருத்திச்சங்க முக்கிய உறுப்பினர்கள் பலரும் இவ்விடயமாகப் பலரோடு பல தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு தீவிர முயற்சியில் இறங்கினர்.
இருந்தும் காலம் கடந்து போனதேயொழிய காரியங் கைகூடவில்லை. இதற்கு காரணிகளாக நவீன வசதிகள் கொண்ட இரண்டுமாடிக் கட்டிடம் அமைய வேண்டும் என்ற விருப்பும் அப்போதைய நாட்டுச் சூழ்நிலையும் காரணமாக அமையலாம். இறுதியாக காலம் கனிந்தது. கைகொடுக்க முன்வந்தார் எமது கல்லூரியின் பழையமாணவரும் இலண்டன் மாநகரில் தொழிலதிபராக விளங்குபவருமான திரு.கந்தசாமி தர்மகுலசிங்கம் என்ற பெருவள்ளல் கட்டடத்துக்கான முழுச் செலவுகளையும் தான் பொறுப்பேற்பதாகவும், கட்டடத்தை 2011-04-03 அன்று நூற்றாண்டு விழாவோடு திறப்பதற்கான சகல ஒழுங்குகளையும் செய்யுமாறு எம்மைப் பணித்தார். அத்தோடு நின்று விடாமல் எமது வேண்டுகோளை ஏற்று இலங்கைக்கு வருகைதந்து, 29-04-2010 அன்று 2010ம் ஆண்டிற்கான கல்லூரிப் பரிசளிப்பு விழாவில் பிரதமவிருந்தினராகச் சிறப்பித்து, இரண்டுகோடி ரூபாவில் கட்டப்பட இருக்கும் இரண்டுமாடிக் கட்டடத்துக்கான அடிக்கல்லை சுபமுகூர்த்த வேளையில் நாட்டி வைத்ததோடு, அன்றைய நாளை கல்லூரியின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கவும் செய்தார்.
அகற்றப்பட்ட ஆராதனை மண்டபத்தின் தோற்றம் – 2010
இதோ ஓடுகள் கழற்றப்பட்டு, மரங்கள் சிலாகைகள் கழற்றப்பட்டு, மண்ணோடு மண்ணாகக், கல்லோடு கல்லாகப் போகிறது எமது கல்லூரியின் ஆராதனை மண்டபம். எமது கல்லூரியின் பழைமையைப் பறைசாற்றிக் கொண்டிருந்த இறுதி வாரிசின் இறுதி மூச்சு அடங்கிப்போகிறது. தள்ளாடும் தூண்களுக்கும், சிதிலமடைந்த சுவர்களுக்கும் நடுவே இன்றோ நாளையோ என்று தன் விதியை எதிர்நோக்கியிருக்கும் அந்த ஆராதனை மண்டபத்தை ஒருமுறை திரும்பிப் பாருங்கள். அந்த நாள் ஞாபகம் உங்களுக்கு வரவில்லையா? நீங்கள் மிகச் சிறந்த வைத்திய நிபுணர்கள், பொறியியலாளர்கள், பேராசிரியர்கள், பட்டதாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், கணக்காளர்கள், சமூகசேவையாளர்கள், குடும்பத்தலைவர்கள், அத்தனைபேரும் இதே மண்டபத்தில் தான் க.பொ.த. சாதாரண பரீட்சையை எழுதினீர்கள் என்பதை மறக்க முடியுமா? அதோ! தெரிகிறதே அந்த மேடை, எத்தனையோ அறிஞர்கள், கல்விமான்கள், சமயப் பெரியோர்கள், மகான்கள் ஏறி அமர்ந்த மேடை விண்ணைத்தொட்ட ரஷ்யாவின் விண்வெளி வீரன் யூரிக்காரினும், தோழர் வி.பொன்னம்பலமும் ஒருமித்து நின்ற மேடை அது.
இன்றைய பேராதனைத் தமிழ்த்தறைத் தலைவர் கலாநிதி. துரைமனோகரனின் முதற் சிறுகதையான ‘பாவையின் பரிசு’ கலையரசு சொர்ணலிங்கத்தின் தலமையில் இங்கு வைத்துத் தான் வெளியிடப்பட்டது. எத்தனையோ பரிசளிப்பு விழாக்களை, கலைமகள் விழாக்களை, கலைநிகழ்ச்சிகளைக் கண்ட மேடை இது. சோதிலிங்கம் வாத்தியாரின் ‘தேரோட்டி மகன்’ இங்கு தான் முதலில் அரங்கேறியது. எத்தனையோ நாவன்மை மிக்க பேச்சாளர்களை உருவாக்கிய மேடையிது. மிகுந்த வேதனையோடும் கனத்த இதயத்தோடும் இறுதி விடையளிக்கத் தயாராகிறோம். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையின் நியதி’ என எண்ணி எம்மைத் தேற்றிக் கொள்கிறோம். அந்த மேடையும் மண்டபமும் எம் கண்ணில் இருந்து மறைந்தாலும் இதயங்களில் இருந்து மறையாது.
இலங்கையில் திருஞானசம்பந்தரினால் தேவாரப்பதிகம் பாடப்பெற்று, ஆராதனை செய்யப்பட்ட திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரத்தில் பாலாவியின் கரைமேல் எழுந்தருளியிருக்கும் திருக்கேதீஸ்வர பெருமானுக்கு கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மகோற்சவம் நடந்து வருகின்றது. யாழ்குடாநாட்டில் பாடசாலைகளுக்கு திருவிழாக்கள் ஒதுக்கப்பட்டு எமக்குப் பூங்காவனத்திருவிழா உபயம் தரப்பட்டது. இத்திருவிழாவை கல்லூரியின் சைவமாணவர் மன்றம் சகலரினதும் ஒத்துழைப்புடன் செய்துவருவது வழக்கம். 1966ம் ஆண்டிலிருந்து 1969ம் ஆண்டுவரை தொடர்ச்சியாக இத்திருவிழாவை, சகலரதும் ஒத்துழைப்புடன் நடத்திய இனிமையான இனிய அனுபவம் மறத்தற்கரியது. 1965ம் ஆண்டு மன்னாரில் ‘கொலரா நோய்’ பரவியதையடுத்து மன்னார் மாவட்டத்திற்கான தொடர்பு, ஏனைய மாவட்டங்களில் இருந்து துண்டிக்கப்பட்டது. குடாநாட்டிலிருந்து எந்த ஒரு பள்ளிக்கூடமும் மகோற்சவத்தில் கலந்து கொள்ள முடியாத போது அமரர்.கு.சிவமைந்தன் மற்றும் சில மாணவர்களுடன் துவிச்சக்கரவண்டியில் (மன்னார் பஸ் ஓடவில்லை) சென்று, கோயில் நிர்வாகத்தினர் மெச்சும் வகையில் திருவிழாவை செய்து, அமரர் பஞ்சலிங்கம் தனக்கே உரித்தான பாணியில் கலை நிகழ்ச்சியும் செய்து பலரது பாராட்டுக்களையும் பெற்;று உரும்பிராய் இந்துவின் கொடியை உயரப் பறக்க விட்டனர். திருக்கேதீஸ்வரத்தில் பூங்காவனத்திருவிழா செய்வது ஆத்மீகப் பெறுபேறுகளுக்கும் மேலாக வாழ்க்கையில் மறக்க முடியாத இனிமையான பொழுதுபோக்கு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது.
விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு.இரட்ணம் மாஸ்ரர் தலைமையில் சைவமாணவர் மன்றத்தினர், ஏனைய மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், ஊர்ப்பொதுமக்கள் எல்லோருமாகக் குறைந்தது 100 பேர், திருவிழாவிற்கான பொருட்களுடன் வாடகைக்கு அமர்த்தப்பட்ட இலங்கைப் போக்குவரத்து சபை பஸ்களில் செல்வோம். திருவாசகமடத்தைக் கேட்டுப் பெறுவோம். எமது திருவிழா பூங்காவனமாகையால் எட்டிய காட்டுப்பகுதியில் இருந்து இலை, குழை, பூக்கள் முதலியவற்றை கொண்டுவந்து அலங்காரம் செய்வோம். சில நிகழ்ச்சிகளுக்கான ஒழுங்குகளும் இருக்கும். திருவிழா முடிய இரவு ஒரு மணிசெல்லும். 1967ம் ஆண்டு அந்நாள் அதிபர் அமரர்.திரு.அ.வைத்தியலிங்கம் அவர்கள் தம் மனைவி பிள்ளைகளுடனகலந்துகொண்டு சிறப்பித்தார். அவ்வருடம் திரு சோதிலிங்கம் ஆசிரியரின் ‘சங்கீத கதா கலாட்சேபம்’ அணி செய்தது. திருக்கேதீஸ்வரத்தில் அந்தநாட்களில் தலைவராய் இருந்தவர் அமரர் சேர்.கந்தையா வைத்தியநாதன் அவர்கள். இவர் மிகுந்த சைவத்தமிழ்ப்பற்றாளர். அவரது வீட்டின் பெயர் ‘குடில்’ திருவிழாக் காலங்களில் அன்னாரோடு பேசிப்பழகி, அறிவுரைகளைச் செவிமடுப்பது எமது முற்பிறவிப்பயன் வழியே. 1971ம் ஆண்டு சித்;திரை 5ம் திகதி சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சி தொடங்கியது. அதிலிருந்து நாட்டு நிலைமை சிறிதுசிறிதாக சீரற்றதாகியது.
தொடர்ந்து போர்க்காலச் சூழ்நிலையில் சிக்கியது. இக் காலங்களில் திருவிழா நடைபெறவில்லை. சமாதான காலத்தை அடுத்து பெருமானுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்று மகோற்சவம் நடைபெற்று வருகிறது. ஆனால் எமது திருவிழாவில் சிறுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எமது பூங்காவனத்திருவிழா நிறுத்தப்பட்டு கொடியிறக்கத் திருவிழா உபயம் தரப்பட்டிருக்கிறது. எமது திருவிழா உபயச் செலவை தட்சணை உட்பட ரூ.27இ000ஃஸ்ரீவை வருடம் தோறும் தவறாது உதவி வருகிறார்கள். அந்த நாட்களில் இத்திருவிழாவை முன்னின்று நடத்தியவர்களான திரு.து.ம.செல்வராசாவும், சுப்பிரமணியமும் இத்திருவிழாவை என்றைக்கும் தொய்வின்றி செய்ய வேண்டுமென்பது அவர்களது ஆவல். 2010ம் ஆண்டு திருவிழாவிற்கு எமது கல்லூரியில் இருந்து பல மாணவர்கள் மிகுந்த கரிசனையோடு சென்று இத்திருவிழாவைச் சிறப்பாக செய்தார்கள். இதில் எமது கல்லூரி அதிபர் திருஅ.ஈஸ்வரநாதன் அவர்களும் குடும்பத்தினரும் பங்குபற்றினார்கள்.
தொகுப்பு
செல்லையா நாகரட்ணம்
ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர்