History

யா/உரும்பிராய் இந்துக்கல்லூரியின் வரலாறு

எமது பகுதி மாணவர்கள் மிஷனரிமாரால் நடத்தப்பட்ட கிறிஸ்தவப் பாடசாலைகளிலேயே கல்வி கற்றார்கள். இவர்கள் வீட்டிலே வீபூதியைப் பூசி பாடசாலைக்குச் செல்லும் போது வீதியிலே அதை அழித்து விட்டு உதட்டிலே விவிலிய வேதநூலில் உள்ள வாக்கியங்களை உச்சரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உடையவராயினர். ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் உத்தியோக வாய்ப்புப் பெறுவதற்கு ஆங்கிலத்தைப் படிக்க வேண்டியிருந்தது. 1908ம் ஆண்டளவில் ஸ்ரீலஸ்ரீ.ஆறுமுக நாவலர் பெருமான் அவர்கள் சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கு சைவத்தமிழ் வித்தியாசாலைகளின் தோற்றத்திற்கு வித்திட்டகாலம். அதனால் சைவத்தமிழ் வித்தியாசாலைகள் குடாநாட்டின் பல பாகங்களிலும் ஆங்காங்கே தோன்றிக்கொண்டிருந்தன. அது மட்டுமல்லாமல் நாவலர் பெருமான் ஏற்றிவைத்த சைவத் தீபம் குடாநாடெங்கும் பிரகாசித்துக்கொண்டிருந்த காலமாக இருந்தது. இப்பிரகாசத்தின் பயனாக சைவபரிபாலனசபை 1988ம் ஆண்டு தோன்றியது.

இச்சபை தூண்டாமணி விளக்காய் நின்ற சுடர், அதன் தூண்டுதலால் உரும்பிராயைச் சேர்ந்த அப்புக்காத்து நாகலிங்கம் என்பவர்; பசுபதிச் செட்டியாரின் உதவியுடன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியை ஸ்தாபித்தார். இதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை, கொக்குவில் சாவகச்சேரி போன்ற இடங்களில் சைவ, ஆங்கிலப்பாடசாலைகள் தோன்றின. வைத்தியகலாநிதி வல்லிபுரம், திரு.சுவாமிநாதன், திரு.நாகலிங்கம் அவர்கள் சைவ ஆங்கிலப் பாடசாலையை எமது ஊரிலும் ஸ்தாபிக்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்திருந்தார்கள்;. இதனால் அவர்கள் வீடு, வீடாகச் சென்று முதலில் பத்துப் பிள்ளைகளைச் சேர்த்து இப்பாடசாலையை ஆரம்பித்தார்கள்;. 1911ம் ஆண்டு சித்திரைத் திங்கள் மூன்றாம் நாள் இப்பாடசாலை மேற்குப் பக்கத்திலுள்ள கிணற்றின் அயலிலே அமைந்திருந்த ‘பொடியார்’; என்பவரின் புகையிலைக் கொட்டிலில் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. திருவாளர் சின்னையா என்பவர் ஆசிரியராக இருந்தார். வகுப்பு ஆரம்பிக்கப்பட்டபோது முதல் மாணவனாக வைத்தியகலாநிதி வல்லிபுரம் அவர்களின் தம்பியான சிதம்பரப்பிள்ளையின் மகன் விசுவலிங்கமே சேர்த்துக் கொள்ளப்பட்டார். (விசுவலிங்கம் என்பவர் எமது கல்லூரியின் இன்றைய பழையமாணவர் சங்க செயலாளர் திரு.சோமநாதன் அவர்களின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.) இவ் வகுப்புக்களின் பின் உரும்பிராய் அன்னை பெற்றெடுத்த ஐந்து லிங்கங்கள் பிறந்த வீடான பஞ்சலிங்கம் மனையாகிய செல்லப்பா மீனாட்சிப்பிள்ளை ஆகியோரின் வீட்டு விறாந்தைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இங்கும் சில காலமே வகுப்புக்கள் நடைபெற்றது. பின்னர் திரு.சின்னத்தம்பர் வேலுப்பிள்ளை அல்லது திரு.ஐயம்பிள்ளை என்பவரிடம் 10பரப்பு நிலம் இலவசமாகப் பெறப்பட்டு அங்கு கொட்டில் அமைத்து ஸ்தாபிக்கப்பட்டது.

அதன் பின் இப்பாடசாலை இந்துக்கல்லூரி அதிகார சபையினரின் பரிபாலனத்திற்குக் கையளிக்கப்பட்டது. அவர்கள் கிடுகினால் வேயப்பட்ட ஒரு மண்டபத்தை அமைத்துக் கொண்டனர். அதனால் கூடுதலான பிள்ளைகள் படிக்க வசதி ஏற்பட்டது. திரு.சின்னையா உபாத்தியாயர் விலக அவரது இடத்திற்கு திரு.வியாகேசர் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார் என்பதை அறிந்தோம். இப்பாடசாலை ஸ்தாபித்ததன் மூலம் திருவாளர்கள் வைத்தியகலாநிதி வைரவநாதன் வல்லிபுரம், திரு. சுவாமிநாதன், எம். நாகலிங்கம், ஆகியோருடன் திரு.சின்னத்தம்பர் வேலுப்பிள்ளை ஆகியோர் ஒரு மாபெரும் சேவையை, ஒரு மகத்தானதும் போற்றதற்குரியதுமான சேவையை இவ்வூருக்குப் புரிந்திருக்கிறார்கள். இப்பாடசாலை நடுவூர்ப் பகுதியில் பழுத்த நன்மரம் போல் இவ்வூரிலுள்ள அனைத்துப் பிள்ளைகட்கும் பெரும் பயன் அளித்தது. அதுமட்டுமல்லாது சூழவுள்ள சுன்னாகம், இணுவில், கோண்டாவில், கோப்பாய், நீர்வேலி, அச்செழு, ஊரெழு, போயிட்டி, புன்னாலைக்கட்டுவன் ஆகிய ஊரிலுள்ள பிள்ளைகள் பலரும் கற்றுக் கடைந்;தேற வாய்ப்பளித்திருந்தது. அதிகார சபையினரின் பரிபாலனத்தின் கீழ் பாடசாலை வந்ததும் தலைமையாசிரியராக திரு.வியாகேசர் என்பவர் நியமனம் பெற்றார்.

இவருக்கு ஆரம்ப காலத்தில் உதவி ஆசிரியர்களாக இருந்தவர்கள் உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த திரு.சரவணமுத்து தம்பிப்பிள்ளை, கோப்பாயைச் சேர்ந்த திரு.சுவாமிநாதன், உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த திருவாளர் அம்பலவானர், திரு. வைரமுத்தர் ஆகியோர்கள் ஆவர.;; 1915ல் இங்கு ஒரு தமிழ்ப்பிரிவை ஆரம்த்தனர். அதற்குத் தலைமையாசிரியராக இருந்தவர் நீர்வேலியைச் சேர்ந்த பண்டிதர் வேலுப்பிள்ளை. இத் தமிழ்ப் பிரிவில் அரிவரி தொடக்கம் மூன்றாம் வகுப்பு வரை வகுப்புக்கள் இருந்தன. மாணவர்கள் தமிழ் மூன்றாம் வகுப்பு சித்தியெய்திய பின்னரே ஆங்கிலப் பாடசாலைக்குச் சேர்க்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அவ்வாறு சேரும் பிள்ளைகள் ஆங்கிலம் முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டனர்.

ஆங்கிலம் இரண்டாம் ஆண்டில் சித்தியடைந்த பின்னர் ஐந்தாம் தரத்தில் சேர்க்கப்படுவார். அக்காலத்தில் இங்கு ஆறாம் வகுப்பு வரையிலேயே வகுப்புக்கள் இருந்தன. பிள்ளைகள் தொகை அதிகரிக்க மேலதிக ஆசிரியர்களாக கோப்பாயைச் சேர்ந்த திரு.எம் நாகலிங்கம், திரு.இராமலிங்கம், திரு.கதிரவேலு, சரசாலையைச் சேர்ந்தவரும் ஸ்தாபகரின் மருமகனுமாகிய திரு.இளையதம்பி ஆகியோர் நியமனம் பெற்றனர். 1920ல் திரு.வியாகேசர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். அவரது இடத்திற்கு சாவகச்சேரியைச் சேர்ந்தவரும் பயிற்றப்பட்ட ஆங்கிலத் தராதரம் பெற்றவருமான திரு.குமாரசுவாமி அவர்கள் தலைமையாசிரியரானார். இவரது காலத்தில் இங்கு ஏழாம் எட்டாம் வகுப்புக்கள் ஆரம்பிக்க ஆயத்தம் செய்யப்பட்டது. ஆனால் கட்டட வசதி போதாமல் இருந்தது. இதனால் வைத்தியகலாநிதி அவர்கள் மலாயன் உரும்பிராய் சங்கத்துடன் தொடர்புகொண்டு 130அடி நீளம், 20அடி அகலம் கொண்ட ஒரு ஓடிட்ட கட்டடத்தை அமைத்துத் தரும்படி கோரிக்கை விட்டார். அதன் பயனாக கட்டடம் அமைக்கப்பட்டது. வகுப்புக்களும் தொடங்கப்பட்டன. 1923ம் ஆண்டளவில் திரு.குமாரசுவாமி அவர்கள் சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல,

ஆங்கிலத்தராதரம் பெற்ற திரு.பி.தம்பு அவர்கள் தலைமை ஆசிரியராக நியமனம் பெற்றார். இவரது காலத்தில் 1926ம் ஆண்டு திரு.சீதாராமன் அவர்கள் இவருக்கு சிரேஷ்ட உதவி ஆசிரியரானார். திரு.தம்பு அவர்கள் 1927ம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டு யாழ் இந்துக்கல்லூரிக்கு செல்ல இவரது இடத்திற்கு திரு.சீதாராமன் தலமையாசிரியராக நியமனம் பெற்றார்;. இவர் இந்தியாவின் பாண்டிக்கொடுமுடியை பிறப்பிடமாகக் கொண்ட பிராமண குலத்தவர். யாழ்.வைத்தீஸ்வராக் கல்லூரியிலும் ஆசிரியராக கடமைபுரிந்தவர். இவரது காலத்தில் எட்டாம் வகுப்பு ‘E.S.L.C’ என அழைக்கப்பட்டது. இவரின் திறமையான நிர்வாகத்தாலும், ஆங்கில அறிவினாலும் மாணவர்களை சனி, ஞாயிறு தினங்களிலும் அழைத்து ஆங்கிலக் கல்வியைப் போதித்தமையால் மாணவர் பலர் இங்கு வந்து சேர்ந்து, அரசாங்க உத்தியோகத்தில் சேரக் கூடியதாக இருந்தது.

1931ல் மாணவர்களின் வரவு கூடியதால் பாடசாலையின் வடக்கு கரையோரமாக கிடுகினாலே வேயப்பட்ட நீண்ட கட்டடமொன்று அதிகார சபையினாலே அமைக்கப்பட்டது. அதன் கிழக்குப் பகுதியில் ஆரம்ப விஞ்ஞானம் கற்பிக்கும் ஆய்வுகூட அறையொன்றும் அமைக்கப்பட்டது. 1932ம் ஆண்டில் “J.S.C” வகுப்பு கனிஷ்ட தராதரப்பத்திர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ‘உரும்பிராய் இந்து ஆங்கிலப் பாடசாலை’ என்ற பெயருடன் இருந்த இந்த வித்தியாசாலை ‘உரும்பிராய் இந்துக்கல்லூரி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.”J.S.C” வகுப்பில் சித்தியெய்திய மாணவர்கள் அரசாங்கத்திலும் வேறு துறைகளிலும் வேலைவாய்ப்பைப் பெறும் தகுதியுடையவர்களாயினர். 1935ம் ஆண்டு திரு.சீதாராமன் அவர்கள் காரைநகர் இந்துக்கல்லூரிக்கு மாற்றலானார். அவரது இடத்திற்கு திரு.இராசரத்தினம் தலைமை ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் சேவை செய்தார். பின் திரு.கனகசபை B.A பட்டதாரி தலைமை ஆசிரியராக ஒரு வருடம் கடமையாற்றிய பின் திரு.சீதாராமன் 1940ல் மீண்டும் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார். பின் 1941ல்(S.S.C) சிரேஷ்ட தராதரப்பத்திர வகுப்பு இங்கு ஆரம்பிக்கப்பட்டது.

இதே சமயம் இக்கல்லூரி மூன்றாம் தரத்திற்கு உயர்த்தப்பட்டது. பல பட்டதாரி ஆசிரியர்களும் இங்கு நியமிக்கப்பட்டனர். ஆங்கிலம் கற்பிப்பதில் விற்பன்னரான தனது மகன் ஸ்ரீநிவாசன் ஆ.யு பட்டதாரியை திரு.சீதாராமன் ஆங்கிலம் கற்பிப்பதற்காகவே ஆசிரியராக அமர்த்திக் கொண்டார். ஸ்ரீநிவாசன் இங்கு வரமுன் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் அதிபராக இருந்தார். இவர் வந்த பின் கல்வியிலும் விளையாட்டிலும் நல்ல பெறுபேறுகளை அடையக்கூடிதாக இருந்தது. 1941ல் உதைபந்தாட்டம் ஆரம்பிக்கப்பட்டன. மெய்வல்லுநர் போட்டிகளும் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான மூன்று ஏக்கர் நிலம் இந்துக்கல்லூரி அதிகார சபையினால் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் அது ஒரு தோட்ட நிலமாக இருந்தமையால் உடன் அதனை உபயோகத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. அந்நிலத்திற்கு தெற்கே இருந்த திறந்த வெளியே விளையாட்டு நிலமாகப்

பாவிக்கப்பட்டது. 1945ல் ‘இலவசக் கல்வித்திட்டம்’ அமுலுக்கு வந்தது. அத்தோடு தமிழே போதனா மொழியாயிற்று. இதனால் மாணவர் தொகை அதிகரித்ததால் கல்லூரி வளவின் வடக்கே இரண்டு பரப்பு நிலம் விலைக்கு வாங்கப்பட்டு ஒரு நீண்ட கிடுகுக் கொட்டில் அமைக்கப்பட்டு அங்கு வகுப்புக்கள் நடைபெறலாயின. 1947ல் திரு.சீதாராமன் ஓய்வு பெற அவரது மகன் திரு.ஸ்ரீநிவாசன் அவர்கள் அதிபரானார். இக்காலத்தில் விளையாட்டுத்துறை மேலோங்கியது. விளையாட்டிற்கு இவரே பொறுப்பாகக் கடமை புரிந்தமையும் குறிப்பிடத்தக்கது. 1915ம் ஆண்டிலிருந்து இங்கு இயங்கி வந்த தமிழ்ப்பிரிவு 1949ல் கற்பகப் பிள்ளையார் ஆலயத்திற்கு மேற்கே அக்கோயிலுக்குச்; சொந்தமான காணியில் கட்டடம் அமைக்கப்பட்டு அங்கு இடமாற்றம் பெற்றது. இதனால் இக்கல்லூரிக்கு இடவசதியும் கூடியது. 1957ல் திரு.ஸ்ரீநிவாசன் சிலரது சூழ்ச்சியினால் இங்கிருந்து இடமாற்றம் பெற்று சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு மாற்றலானார். பின்னர் இக்கல்லூரியில் உப அதிபராக இருந்த திரு.எம்.இளையதம்பி அவர்கள் அதிபராக ஒரு வருடம் மட்டும் கடமையாற்றினார். ‘ஆசிரியர் சங்கம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் செயலாளராக எமது ஊரைச் சேர்ந்தவனும், இக்கல்லூரியின் உதவி ஆசிரியருமான திரு.செ.ஐயாத்துரை அவர்கள் நியமிக்கப்பட்டு செயற்பட்டார். திரு.எம்.இளையதம்பி அவர்கள் 1957ன் இறுதியில் காரைநகர் இந்துக்கல்லூரிக்கு மாற்றப்பட்டு இவரது இடத்திற்கு திரு.அ.வைத்திலிங்கம் BA, B.SC அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டார். இவர் ஒரு கணித மேதை, சிறந்த கல்விமான், உயர்ந்த பண்பாளன். இவர் இக்கல்லூரியில் 12 வருடங்கள் அதிபராகப் பணிபுரிந்தார். இக்காலம் ஒரு பொற்காலம் எனலாம்.

1958ல் “B” ‘தரத்தில் இருந்த கல்லூரி ‘A’ தரத்திற்கு உயர்வு பெற்றது. அப்பொழுது அரசாங்கம் இப்பாடசாலையில் ஒரு தொழிற்;பாடம் கற்பிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தது. அதனால் பயிர்ச்செய்கைக்காக நான்கு பரப்புக்காணி வாங்கி விவசாயம் என்ற ஒரு தொழில் பாடத்தை ஆரம்பிக்கத் தொடங்கினர். இவற்றைத் தொடர்ந்து மாணவர் தொகை அதிகரித்ததால் கட்டடம் கட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது பெற்றோர், ஆசிரியர் சங்கம் ஒன்று கூடி, மலாயன் உரும்பிராய் சங்கத்துடன் தொடர்பு கொண்ட சமயம், மலேசியாவில் இருந்த ஸ்தாபகரின் மகன் செல்வநாயகமும், திரு.கந்தையா அவர்களின் மகனான திரு.சிவப்பிரகாசமும், தம்பிஐயா அவர்களும் எம்மோடு தொடர்பு கொண்டு, பாடசாலை விடுமுறைநாட்களில் பாடசாலையில் இருந்து இருவர் வந்தால் இங்கு பணம் வசூலிக்க அனுகூலமாக இருக்கும் என கடிதம் எழுதினார். அதனைத் தொடர்ந்து அதிபர் திரு.அ.வைத்திலிங்கம் அவர்களுடன் திரு.இலகுப்பிள்ளை கந்தையா அவர்களும் மலேசியா சென்றனர். அதே நேரம் உள்ளுரில் பணம் சேகரிப்பதற்காக உபஅதிபராக இருந்த திரு.வைத்தியநாதன், ஆசிரியர்களான திருவாளர்கள் ஐயாத்துரை, கனகலிங்கம், சபாநாயகம் ஆகிய நால்வரும் சுற்றுப்பயணம் சென்றனர். மலேசியா சென்றவர்களும் ஒரு தொகைப்பணத்துடன் வர இவர்களும் ஒரு தொகைப்பணத்தோடு மீண்டனர்;. இத்துடன் அப்போது இப்பாடசாலையில் கல்வி

கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியர்களின் அரைமாதச் சம்பளத்தையும் ஒன்று சேர்த்து இப்போது வடக்குப்பக்கம் இருக்கும் மேல்மாடிக் கட்டடம் உருவாக்கப்பட்டது. இக்கட்டடம் கட்டிப் பூர்த்தியாகிய பின் 1961ம் ஆண்டு இக்கல்லூரி பொன்விழாவைக் கொண்டாடும் காலம். ஆனால் 1960இல் அரசாங்கம் பாடசாலைகளைத் தம்வசம் ஆக்கிக் கொண்டதால் ஊர்மக்களிடையே ஒரு மனமாற்றம் ஏற்பட்டது. இதனால் அவர்களே எல்லாம் கொண்டாட வேண்டும், தாம் ஒரு உதவியும் செய்ய வேண்டிய தேவையில்லை என்பதே அம்மாற்றமாகும். இதனால் பொன்விழாவை பொன்மயமான விழாவாகக் கொண்டாட முடியாமற் போனது. எனவே நிறுவிய மண்டபத்திற்குப் ‘பொன்விழா மண்டபம்’ எனப் பெயர்சூட்டப்பட்டது. இதன் பின்னர் கட்டட வேலைகளுக்கும் அப்பாற்பட்ட வேலைகள் பல அவசியம் செய்ய வேண்டி இருந்ததால் முன் சேகரித்த நிதியில்; மீதியிருந்த பணத்தோடு, ஆசிரியர் திரு.சோதிலிங்கம் அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட நாடகத்தின் மூலமும் ஒரு கதம்ப விழாவில் வசூலான பணத்தின் மூலமாகவும்ஆராதனை மண்டபம் விஸ்தரிக்கப்பட்டது. அங்கு ஒரு கலையரங்கும் அமைக்கப்பட்டது. மாணவர்களின் துவிச்சக்கரவண்டித் தரிப்பிடக் கொட்டகை ஒன்றும் அமைக்கப்பட்டது. இத்துடன் ஆண், பெண் இருபாலாருக்குமான மலசல கூடம் புனரமைக்கப்பட்டது. புதிய தளபாடங்கள் விளையாட்டு மைதானத்தின் தெற்குப்புற மதில்கள் கட்டப்பட்டன.

இதே நேரம் மலாயன் உரும்பிராய் அங்கத்தவர்களின் சங்கமும் கலைக்கப்பட்டதால் அவர்களிடமிருந்த பணம் 7000டொலரை 1960ல் எமது கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அப்பணத்தின் மூலம் நிர்வாக மண்டபம் அமைக்கப்பட்டதுடன் அக்கட்டடத்துக்கு ‘மலாயன் உரும்பிராய் சங்க மண்டபம்’ எனப்பெயர் சூட்டப்பட்டு 1965ம் ஆண்டில் வல்லிபுரம் அவர்களின் மகன் செல்வநாயகம் மூலம் திறந்து வைக்கப்பட்டது. விளையாட்டு மைதானத்திற்கு முன்பு வாங்கிய 3ஏக்கர் காணியுடன், ஊரெழுவைச்சேர்ந்த பாடசாலைப் பரிசோதகர் திரு.குணரத்தினம் அவர்களுக்கு சொந்தமாக இருந்த எட்டுப்பரப்பு காணி கொள்வனவு செய்யப்பட்டு, மைதானத்தின் மத்தியில் அமைந்திருந்த கிணறு மூடப்பட்டு உதைபந்தாட்டத்திற்கு ஏற்ற நிலம் சீரமைக்கப்பட்டது. இத்துடன் பெண்பிள்ளைகளின் விளையாட்டுத் தேவைக்காக கல்லூரி வளவின் அயலில் ஏழு பரப்புக் காணி குத்தகைக்கு எடுக்கப்பட்டு செயற்பாடுகள் தொடங்கின. இவரது காலத்தில் பாடசாலை உதைபந்தாட்டம், கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்கியதுடன் பலர் மேற்படிப்புக்காக பல்கலைக்கழகம் சென்றதை அவதானிக்க முடிகிறது. திரு.அ.வைத்திலிங்கம் அதிபர் அவர்கள் ஓய்வுபெற்ற பின் திரு.சச்சிதானந்தன் அவர்கள் 1971ம் ஆண்டு அதிபராக நியமிக்கப்பட்டார். இவரது காலத்தில் G.C.E A/L வகுப்பு தக்க முறையில் இயங்க பெருமுயற்சி எடுத்து வெற்றியும் கண்டார். இத்துடன் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையை பெண்கள் கல்லூரியாக மாற்ற முயற்சித்த போது உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் விஞ்ஞான ஆய்வுகூடம், விளையாட்டு மைதானம் இல்லாமையால் இக் கோரிக்கை கைகூடவில்லை. பிள்ளைகள் தொகை அதிகரித்ததால் கட்டட வசதியும் தேவையாயிற்று. இதனால் வித்தியாப் பகுதியினரின் உதவியுடன் 15000 ரூபா நிதிபெற்று விவசாயத்திற்காக வாங்கிய நிலத்தில் ஐந்து வகுப்புக்கள் வைக்கக்கூடிய ஒரு ஓட்டுக்கட்டடத்தை அமைத்தனர். இவர் 1974ல் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கு அதிபராக இடமாற்றம் செய்யப்பட, உபஅதிபராக இருந்த திரு.சுவாமிநாதசர்மா (PGDE) அதிபரானார். இவர் குறுகிய காலப்பகுதியில் மாத்திரமே அதிபராக இருந்தார். பின் இவர் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு அதிபரானார். இவர் இடமாற்றம் பெற்றுச் சென்ற பின் கொக்குவில் இந்துக்கல்லூரியில் உபஅதிபராக இருந்த திரு.தியாகராசா BSC Dip. அதிபரானார். இவர் சிறந்த ஒரு விஞ்ஞான ஆசிரியர். இவரும் ஓர் ஆண்டு அதிபராக இருந்த பின்னர் திரு.சி.கனகலிங்கம் அதிபராக உரும்பிராய் இந்துக்கல்லூரிக்கு நியமிக்கப்பட்டார். இவரும் ஒரு விஞ்ஞானப் பட்டதாரி. இவரது காலத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மேற்கு மேல்மாடிக் கட்டடத்தின் 80அடி நீளக்கட்டிடத்தின் கீழ்ப்பகுதி செய்து முடிக்கப்பட்டது. 1978ல் கல்லூரியை விட்டு விலகி, பலாலி ஆங்கிலப் பயிற்சிக் கலாசாலையில் உபஅதிபரானார்.

திரு.இ.சிவானந்தன் உப அதிபரானார். இதன் பின்னர் திரு.ச. சிவன்பாலன் மீண்டும் இக்கல்லூரிக்கு அதிபரானார். இவரது காலப்பகுதியில் முன்னர் தொடக்கப்பட்ட மேல்மாடிக்கட்டடத்தின் மேற்குப்பகுதி செய்து முடிக்கப்பட்டது. பின் 1978ல் திரு .E.சிவானந்தன் BA.Dip in Ed.SLAS. அதிபரானார். இவர் ஒரு சிறந்த நிர்வாகி. கல்லூரியின் கல்வி வளர்ச்சியில் மிக அக்கறையுடன் செயற்பட்டார். இவரது காலத்தில் 1982ல் கட்டட அபிவிருத்திக்காக ஓர் இசைவிழா வைக்கப்பட்டது. இவ் விழாவில் கிடைத்த பணத்துடன், கோப்பாய் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஆலாலசுந்தரம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவில் கிடைத்த ரூ.150,000 ஆயிரத்துடன் மேற்குமாடி 40’20’ நீளப்பகுதியும் கட்டிமுடித்ததுடன் ஒரு சங்கீத அறையும் அமைக்கப்பட்டது. மேற்குமாடிக்கட்டடம் நிறைவேறியதும் ஆராதனை மண்டபத்தை இடித்து ஒரு திறந்தவெளி அரங்கு ஒன்றை அமைக்கவும் குழாய் நீர் விநியோகம், விளையாட்டு மைதானத்தில் கிணறு அமைத்தல், வடக்கு, கிழக்குப் பகுதிக்கு மதில் அமைத்தல் போன்ற விடயங்களுடன், காவலாளிக்கான வீடு ஒன்றை அமைத்தல் போன்ற வேலைகளை இங்கிலாந்தில் இயங்கி வந்த உரும்பிராய் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் மேற்படி வேலைகளுக்குத் தேவையான பணத்தை மதிப்பீடு செய்து அனுப்பும் படி கேட்ட சமயம் அப்போது பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளராக இருந்த திரு.செ.ஐயாத்துரை அவர்களால் இலண்டன் பழைய மாணவர்களுக்கு அனுப்பப்பட்டது. இவரின் கோரிக்கையை ஏற்ற இலண்டன் பழைய மாணவர் சங்கம் முதலில் விளையாட்டு மைதான மதில்களைக்கட்டப் பணம் அனுப்பிவைக்கச் சம்மதம் தெரிவித்துக் கடிதத் தொடர்புகள் ஏற்பட்ட சமயம் திரு.E.சிவானந்தம் அவர்கள் பதவி உயர்வு பெற்று (வித்தியாசிரியராக) சென்றுவிட்டார்.

இவரது காலத்தில் கல்வியிலும், விளையாட்டிலும் எமது கல்லூரி மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியதை நீங்கள் அறிவீர்கள். பின்னர் திரு.செ.சிவன்பாலன் அதிபரானார். இவரது காலத்தில் விளையாட்டு மைதான மதில் வேலைகள் நிறைவு பெற்றது. சில மாதங்களின் பின் இலண்டனில் இருந்து பழைய மாணவர் ஒருவர் கல்லூரிக்கு வருகை தந்து விளையாட்டு மைதானத்தைப் பார்வையிட்ட சமயம், மைதானம் பற்றைக்காடாக இருந்ததைக் கண்ணுற்று பழையமாணவன் இலண்டன் சென்று, அங்குள்ளவர்களுக்கு விபரங்களைக் கூறிய பின் பணம் அனுப்புவதை அவர்கள் நிறுத்திவிட்டார்கள். இவரது காலத்தில் 1986ல் இக்கல்லூரியின் பவளவிழா மிகவும் சிறப்பாக வித்தியா மலர் வெளியீட்டுடன் கொண்டாடப்பட்டது. இவரது காலத்தில் இயங்காமலிருந்த பழையமாணவர் சங்கம் இயங்கியதுடன், பாடசாலையின் அபிவிருத்திச்சங்கத்துடன் இணைத்து இவ்விழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டமை மேலும் ஒரு சிறப்பம்சமாகும்.